Sunday, November 20, 2005
ME TOO...

'ஏன் நீங்க ஊருக்குப் போக முடிவு செஞ்சீங்க?' என்று கேட்ட என் அமெரிக்கத் தோழரிடம் அருமையாக விளக்கம் கொடுப்பதாக நினைத்து ஒரு உவமை சொல்லியிருந்தேன். திருமணத்துக்கு முன்பே அமெரிக்கா வந்து, பிறகு விடுமுறையில் ஊருக்குப் போய் துணையுடன் திரும்பி, சில வருடம் ஊர்சுற்றி, பிறகு குழந்தை பெற்று பெற்றோரை அழைத்து சில மாதம் தங்களுடன் வைத்து பெருமைப்பட்டு, தனி வீடு, இரு கார்கள் என்று வளரும் குடும்பங்களிலிருந்து பெரிதும் வேறுபட்ட எங்கள் அமெரிக்க வாசத்தை, 'மரத்தைப் பிடுங்கி நடுவ'தைப் போல சிரமமானது.....
அதன் உண்மையான அர்த்தம் இப்போது நன்றாகவே விளங்குகிறது. அதன் சொந்த மண்ணிலேயே மறுபடியும் நடப்பட்டாலும், பிடுங்கப்பட்ட மரம் மீண்டும் பழைய நிலைக்கு வருவதன் சிரமங்களை இப்போது உணர்ந்துகொண்டிருக்கிறேன். ஆனால் வேண்டி ஏற்றுக்கொண்ட மாற்றமானதால் வலிமைக்குக் குறைவில்லை. இன்னும் சில வாரங்களில் இயல்பு நிலைக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை வர இரண்டு வாரம் ஆகிவிட்டது.
குழந்தைகளின் பள்ளி ஏற்பாடுகள், அடுக்கி வைக்கப்பட்ட தூசி படிந்த பொருட்களாலான வசிப்பிடத்தை சரிப்படுத்தல், வரிசையாக வருகைதரும் நண்பர்கள்/உறவினர்கள், கார் வாங்குதல்... இவற்றோடு இரண்டு புதுமனைபுகுவிழாக்கள், இரண்டு பூப்புநன்னீராட்டுவிழாக்கள், துக்கம் விசாரிப்புகள், மருத்துவமனையில் படுத்துள்ள உறவினருக்கு ஆறுதல் என நேரம் பறக்கிறது.
இதற்கிடையில் ஒருவழியாக பி எஸ் என் எல் அகலப்பாட்டை இணையத்தொடர்பும் விண்ணப்பித்து, அதுவும் இன்று வந்துவிட்டது. இடையிடையே சில நிமிடங்கள் தமிழ்மணம் மேய்ந்ததோடு சரி.